செவ்வாய், ஜூன் 12, 2012

புகை பிடித்தல் – சில குறிப்புக்கள்

இந்த குறிப்புக்கள் எனக்கு ஈமெயிலில் வந்தவை.  பகிர்ந்துகொண்டால் பலருக்கும் பயன் தரும் என்பதால் பதிவிடுகிறேன்.

மே 31-ம் நாள் உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு நாள்
MAY 30,2012

புகை பிடித்தல் – சில குறிப்புக்கள்
” to quit smoking all you need is a cigarette and a few wet matches ” என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருப்பது, பல் வேறு மட்டங்களில், விதம் விதமான
விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. புகைபிடிக்கிற பழக்கம், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் நிச்சயமாக ஐயமில்லை.

புகை பிடிக்கிற பழக்கம் இருக்கிறவர்களில், பெரும்பான்மையானோர்,அப்பழக்கத்தை விட்டு ஒழித்து விடவேண்டும் என்று நினைத்து, முடியாமல் சிரமப்படுகிறவ்ர்கள் தான் என்பது என் கணிப்பு. இந்தப் புகைபிடிக்கிற பழக்கத்தை ஒட்டு மொத்தமாக சமூகத்தில் இருந்து களைந்து விட, இருக்கிற எளிமையான ஒரே வழி, ஒட்டுமொத்தமாக சிகரட்டு உற்பத்தி, விநியோகத்தைத் தடை செய்வது என்று நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய காரியமில்லை. புகையிலை விவசாயிகள், புகையிலை வர்த்தகர்கள், சிகரட்டு ஆலையில் வேலை செய்பவர்கள், அந்தத் தொழிலில் புழங்கும் பணம், நம் உள்நாட்டு உற்பத்தியில் சிகரட்டுத் தொழிலின் பங்களிப்பு, அந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், சிகரட்டு உற்பத்தியிலும், விற்பனையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்புப் பெறுபவர்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனையை, நான்கு பேர் சேர்ந்து முடிவெடுத்து விட முடியாது. புகைபிடிக்கிற காட்சிகளை, திரைப்படங்களில் இருந்து நீக்குவதன் மூலம், அப்பழக்கத்தை படிப்படியாகவாவது சமூகத்தில் இருந்து ஒழித்து விட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை, அதாவது அவர்கள் சொல்வது நடக்கும் என்றால். ஆனால், அது ஒரு படைப்பாளியின் உரிமையில் கைவைக்கிற செயல் என்பதையும்
மறந்து விட முடியாது. அதுவும், சமூகத்தில் இருக்கும் புகைப்பழக்கத்திற்கும், திரைப்படங்களில் வருகின்ற புகைப்பிடிக்கிற காட்சிகளுக்கும், எவ்வளவு தூரம் தொடர்பிருக்கிறது என்பதை முறைப்படி ஆராய்ந்து பார்க்காத வரையிலும். அப்படி ஒரு சமூகவியல் ஆராய்ச்சியோ, அல்லது கருத்துக் கணிப்போ நடந்ததாக நினைவில்லை. அப்படி ஏதேனும் நடந்து, அந்த ஆராய்ச்சியின் முடிவை மக்களிடத்தில் வைத்து, அதன் காரணமாக திரைப்படங்களில், புகைபிடிக்கிற காட்சியை தடை செய்கிறோம் என்று சொன்னால், சமூக நலன் மீது பற்று கொண்டோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். தடை செய்கிற அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தால், அதை தவறாக பயன் படுத்த முடியாது, அதிலும், இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில். தங்களுக்கு பிடிக்காதவற்றை, சமூகத்துக்கும் ஆகாது என்று சொல்லி, தடைகளை விதித்துக்கொண்டே போவதற்கு, இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய whims & fanices ஐ எல்லாம் பொது ஊடகங்களில் திணிக்க முடியாது.

இதை வாசிக்கிறவர்கள் அனைவரும், தங்களுக்குத் தெரிந்த புகைப்பழக்கம் இருக்கிற அனைவரிடமும், ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுகிறேன், அதாவது ” எந்த வயதில் இந்தப் பழக்கம் ஏற்பட்டது? ” என்று. பதில் சொல்பவர்களில் பெரும்பான்மையானோர், 17 வயதில் இருந்து 25 வயதுக்குள்ளாகத்தான் சொல்லுவார்கள். புகைப்பிடிக்கிற பழக்கத்தைப் பொறுத்தவரை, நான் இது வரையிலும், இளவயதில் அப்பழக்கத்துக்கு ஆளானவர்களைத்தான்
பார்த்திருக்கிறேன். நாற்பது வயதில், ஒருவருக்கு திடீரென்று புகைப்பழக்கம் ஏற்பட்டது என்று நான் கேள்விப்பட்டதில்லை. ஆக, சிகரட்டுப் பழக்கம் ஒருவரை, வாலிப வயதில் தான் பற்றிக்
கொள்கிறது. குறிப்பாக, பள்ளி இறுதி வகுப்புகளிலும், கல்லூரிப்பருவங்களிலும் ( குறிப்பாக விடுதிகளில் தங்கிப் படிக்கும் போதும்), salaried bachelors ஆக இருக்கும் போதும் தான். கல்யாணம் ஆனபிறகு மனைவி பார்த்துக் கொள்ளுவார்.

இந்த குறிப்பிட்ட வகையினரை, சிகரட்டுப் பக்கம் போகாமல் பார்த்துக்கொண்டாலே, புகைபிடிக்கிற பழக்கத்தை, பெருமளவில் குறைக்கலாம். அது எப்படி?

1. பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் ( அதாவது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும் ) இருக்கும் கடைகளில், சிகரட்டுகள் விற்பனையைத் தடை செய்யலாம். புகைப்பிடிக்கிற பழக்கத்தினால், ஏற்படுகின்ற தீமையை, உடல்நலக்கேடுகளை, சமூகவியல் வகுப்புகளில் ஒரு பாடமாக வைக்கலாம். நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், போதைப் பொருட்கள் கூட புழக்கத்தில் இருந்தன. ஆனால், நானோ என் நண்பர்களோ, அந்தப் பக்கம் ஒதுங்கியதில்லை. பயம் தான் காரணம். போதைப்பொருட்கள் எடுத்துக் கொள்வதினாலான பின் விளைவுகளை நன்றாக
அறிந்திருந்தோம். நரம்பு எலும்புகள் தெரிய ஒரு அரைகுறை உயிருடன் இருந்த ஒரு போதைப் பொருள் ஆசாமியை, ஒரு விவரணப்படத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. உயிரே போனாலும், இந்த வஸ்துக்களை தொடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், புகைக்கு எதிரான இது போன்ற பிரச்சாரம் ஏதும் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை.

2.புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும் பெரியவர்கள், தங்கள் குழந்தைகளை, ” கடைக்குப் போய், ஒரு வில்ஸ் பாகெட்டு வாங்கிட்டு வா ” என்று சொல்லாமல் இருத்தலும், குழந்தைகளுக்கு தெரியும்படியாகவே புகை பிடிக்காமல் இருப்பதும் முக்கியம். இவையும் பெருமளவில், இள வயதிலேயே புகைப் பழக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது.

3. புகைப்பிடிக்கிற பழக்கம் இல்லாத பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு புகைப்பழக்கம் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டால், அதனை ஒழுக்கக் குறைவான விஷயமாகப் பார்க்காமல், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிற விஷயமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களுக்கு இருக்கும் மனஅழுத்தத்தினால், பெற்றோரை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. (“இது •பைனல் இயர், நோ கேபிள் டிவி, நோ கிரிக்கெட், அண்ணா யுனிவர்சிட்டிலே மட்டும் சீட்டு கெடைக்கலன்னா…” வகையான, மிரட்டல்கள், பெற்றோர் நினைப்பதை விடவும் அதிகமான மன அழுத்தத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் ). அதனால், பெற்றோரை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைக்கிற குழந்தைகள், தங்கள் உடல்நல்த்துக்கும் கேடு விளையும் என்பதைப் புரிந்து கொண்டு சிகரட்டுபக்கம் எல்லாம் போகாமல், க்ளாஸ¤க்கு கட் அடித்து விட்டு ராணி முகர்ஜி படத்துக்குப் போவது, நடு ராத்திரி டிவி பார்ப்பது போன்ற உபத்திரவமில்லாத விஷயங்களினால் outlet தேடிக் கொள்ளுவார்கள்.

4. ஆந்திராவில் இருக்கும் ராயலசீமா ஆல்கலிஸ் என்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் , புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு என்று தனியாக ஊக்கத்தொகை வழங்குகிறது. மற்ற நிறுவனங்களும், இது போல ஊக்கத் தொகை வழங்காவிட்டாலும், வேறு ஏதாவது யோசித்து, தங்கள் நிறுவனங்களில் புகைப்பழக்கம் இல்லாமல் செய்வதற்கு வழிமுறை செய்யலாம். அந்த
நிர்வாகங்கள், தங்களுடைய HR துறையில் விசாரித்தால், நிறைய ஐடியாக்கள் கொடுப்பார்கள்.
இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பக்கட்டுப்பாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்தது. பல கோடி ரூபாய்களை அதற்கென ஒதுக்கி திறமையாக வேலை செய்தது. அது, தந்த பலனை, நாம் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே போல சுகாதாரத்துறை அமைச்சகமும், யோசித்து, சிறிது சிறிதாக திட்டங்களைத் துவங்கி, முறையாக சிகரட்டு பழக்கத்தை சமூகத்தில் இருந்தே ஒழித்து விடலாம். சமூகத்தில் இல்லாத காரியம், பின் சினிமாவில் இடம் பெறாது. ( ஒரு சின்ன உதாரணம்,. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் வந்த திரைப்படங்களில், குதிரை பந்தய்சூதாட்டம், பணக்காரர்களின் பொழுதுபோக்காக அடிக்கடி காட்டப்படும். ஏனெனில், அப்போது அது நிஜத்திலும் பணக்காரர்களின் பொழுது போக்காக இருந்தது. பின்னர் குதிரைப்பந்தயம், இருபது ஆண்டுகளாக தடை செய்யப்பட்டபோது, அப்போது இருந்த இரண்டு தலைமுறையினருக்கு குதிரைப் பந்தயம் என்றாலே என்ன என்று தெரியாமல் போனது. இப்போது காட்சி அமைக்கும் உதவி இயக்குனர்கள், ” சார், ஹீரோ ஒரு பெரிய பணக்காரன், அடிக்கடி குதிரை ரேசுக்குப் போவான் ” என்று காட்சி சொன்னால், ” யோவ், குதிரை ரேசெல்லாம், பழைய கதை, ஹீரோ golf ஆடுவான்ன்னு சீனை மாத்து” என்று சொல்வார்கள்) அதை விடுத்து, புகைபிடிக்கிற காட்சிகளைத் தடை செய்கிறேன் என்று இறங்குவது, கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாத பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாகத்தான் தோன்றுகிறது.

-சமூக விடியல் இயக்கம்